Wednesday, September 26, 2018

#களத்தில்_காவேரி | அடிப்படை வசதிகளின்றி 20 வருடங்களாக போராடி வரும் மக்கள்

வேகமாக வளர்ந்து வரும் சேலம் மாநகராட்சியின்  கடைக்கோடி பகுதியில் ஒதுக்கி வைக்கப்பட்டதைப் போல வாழ்ந்து வரும் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி அவதியுற்று வருகின்றனர். அடிப்படை உரிமைகளைக் கூட பெற முடியாமல் தவிக்கும் அம்மக்களின் அவலநிலை குறித்து விளக்குகிறது இன்றைய களத்தில் காவேரி தொகுப்பு.

சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட 37-வது வார்டு பகுதியில் உள்ளது புதுப்பேட்டை, குட்டிகரடு கிராமங்கள். கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு புறம்போக்கு நிலங்களில் குடிசை போட்டு குடியிருந்த வந்த மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் ஓட்டு வீடு கட்டிக் கொள்ள 4 ஆயிரம் ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் வீடுகளை மேம்படுத்தக் கொண்ட மக்களுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சிகள் காத்திருந்தன.

குடிசை மாற்று வாரியம் வழங்கிய கடனை திருப்பிச் செலுத்துவது எப்படி என்ற அடிப்படை விழிப்புணர்வு இல்லாததால், 4 ஆயிரமாக இருந்த கடன் தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து ஒரு லட்சம் ரூபாயாக மாறியுள்ளது. இதுமட்டுமின்றி வீட்டுமனை பட்டா, வரி செலுத்தியதற்கான ரசீது என எதுவும் இல்லாததால் அப்பகுதிக்கு குடிநீர், கழிப்பிடம், மின்சாரம் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்பதே வேதனையின் உச்சம்.

இவர்கள் தங்கியுள்ள குடியிருப்புகளுக்கு அருகிலேயே மாநாகராட்சிக்கு சொந்தமான மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி உள்ளது. வெறும் பத்தாயிரம் ரூபாய் செலவு செலவிட்டாலே, அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை தீர்க்க முடியும் என்றாலும், அதிகாரிகள் தங்களது கோரிக்கைகளை செவி மடுத்து கேட்கவும் தயாராக இல்லை என வேதனையுடன் கூறுகின்றனர்.

மேலும் கரடு, முரடான சாலைகளில் பயணம் செய்து பள்ளிகளில் படிக்கும் தங்களது குழந்தைகள், வீட்டிற்கு வந்தால் படிப்பதற்கு மின்சாரம் இல்லை என்றும், இதனால் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படிக்கும் குழந்தைகள் பாம்பு மற்றும் பூச்சிகளால் தாக்கப்படுவதாகவும் தாய்மார்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்

பல அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தும் மாற்றத்திற்கான வழி கிடைக்காமல் நிற்கும் தங்களுக்கு குடிசை மாற்று வாரியம் வழங்கிய கடனை ரத்து செய்ய வேண்டும் என்பதும், அடிப்படை வசதிகளை பெற உரிய ஆவணங்களை வழங்க வேண்டும் என்பதுமே அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. 20 வருடங்களாக மனம் தளராமல் போராடி வரும் இவர்கள் தங்களுக்கு விடிவு கிடைத்தே தீரும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

Classic Right sidebar களத்தில்_காவேரி, மக்கள், சேலம், தாய்மார்கள், மின்சாரம் தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Ok1I0B
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment