Thursday, September 27, 2018

என்ன ஆனது புதிய தலைமைச் செயலக வழக்கு? நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

கடந்த திமுகவின் ஆட்சிக் காலத்தில் தமிழக அரசின் சட்ட சபையும், தலைமைச் செயலகமும் பழமையாகிவிட்டது எனக் கூறி சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் பசுமைக் கட்டடமாக கட்டப்பட்டது.

சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் ₹425 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. 2008ல் தொடங்கி 2010ல் கட்டுமானப்பணிகள் முடிவடைந்தது. இதனையடுத்து, அந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் புதிய தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது.

பின்னர், 2011ல் நடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று முதலமைச்சராக ஆட்சி அமைத்தார் ஜெயலலிதா. எந்த இட வசதி இல்லையென்று கருணாநிதி புதிய தலைமைச் செயலகத்துக்கு மாறினாரோ, அதேப்போல் ஜெயலலிதாவும் போதிய வசதியில்லை என்ற காரணத்தை குறிப்பிட்டு மீண்டும் சட்டப்பேரவையையும்,  தலைமைச் செயலகத்தையும் ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றினார்.

இதனை அடுத்து, செப்டம்பர் 2011ல் புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற ஜெயலலிதா உத்தரவிட்டதன் படி, இன்று வரை அந்த கட்டடம் பன்னோக்கு அரசு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே புதிய தலைமைச் செயலகம் அமைத்ததில் மிகப் பெரிய ஊழல் நடந்திருப்பதாக ஜெயலலிதா குற்றம் சாட்டினார். அதன்படி, முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 

ரகுபதி ஆணையத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. பின், வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரகுபதி விசாரணை கமிஷனுக்கு சுமார் ₹4 கோடிக்கு செலவிடப்பட்டுள்ளதை அறிந்ததும் ஆணையத்துக்கு தடை விதித்து அதிருப்தியும் அடைந்தது. 3 ஆண்டுகளாக செயல்படாத விசாரணை ஆணையத்துக்கு கோடிக்கணக்கில் வீணாக செலவிடப்பட்டுள்ளது குறித்து உயர் நீதிமன்றம் அரசுக்கு கண்டனமும் தெரிவித்தது. 

இதனை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி விசாரணை ஆணையர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி ராஜினாமா செய்தார். இந்த நிலையில், புதிய தலைமைச் செயலகம் தொடர்பான முறைகேட்டு வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றியுள்ளதாகவும் அது குறித்த விசாரணை அறிக்கைகளும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று (செப்.,27) நடந்த விசாரணையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Classic Right sidebar New Secretariat, Ragupathi Commission, புதிய தலைமை செயலகம், ரகுபதி ஆணையம் அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2R13tOx
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment