கூகுள் நிறுவனம் இன்று தமது 20வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது. . இணையத்தில் எதை எப்போது தேடினாலும், ஈடு இணையற்ற முடிவைத் தரும் கூகுள் தேடுதல் தளத்தின் சேவை தொடர வேண்டும் என்பதே யூசர்களின் விருப்பமாக உள்ளது. தமிழனால் ஆளப்படும் கூகுளின் வரலாறு மலைக்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது..
1996ல், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த போது மாணவர்கள் லாரி பேஜ் (Larry Page) மற்றும் சேர்ஜி ப்ரின் (Sergey Brin) இருவரும் சேர்ந்து தங்களது ஆராய்ச்சிப் படிப்புக்காக எடுத்துக்கொண்ட கான்செப்ட் தான் சர்ச் எஞ்சின். இணையத்தை பயன்படுத்துவோருக்கு தேடுதலை எளிமையானதாகவும், விரைவானதாகவும் மாற்றுவது எப்படி என்பது குறித்து இருவரும் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வு நடைபெற்ற இடம் ஒரு சிறிய கார் ஷெட். படிப்பிற்காக முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி படிப்படியாக பணத்தை அள்ள வித்திடும் என லாரியும் சேர்ஜியும் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
தங்களது முதலாவது சர்ச் எஞ்சினுக்கு"BackRub என பெயரிட்ட இவர்கள், நிறுவனத்திற்கு பெயர் ஒன்றை தேடிக்கொண்டிருந்தனர். 1 என்ற எண்ணைத் தொடர்ந்து 100 பூஜ்ஜியங்கள் வரும் எண்னுக்கு கூகோள் என்று பெயர். எண் வரிசையில் மிகப்பெரியதாக கருதப்படும் இந்த வார்த்தையை தவறாக டைப் செய்த போது பிறந்ததே கூகுள் என்ற பெயர்.
சில சிறிய தவறுகளால் மிகப்பெரிய வரலாறு படைக்கப்படும் என்பதற்கு கூகுளின் பெயரே மிகச்சிறந்த சான்று. தங்களது நிறுவனத்திற்கு பெயர் கிடைத்ததும் அதனை 1997ஆம் ஆண்டு தனி நிறுவனமாக பதிவு செய்தனர். அதற்கு அடுத்த ஆண்டே, அதாவது 1998செப்டம்பர் 4ஆம் தேதியன்று, கலிஃபோர்னியா மாகாணத்தின் மென்லோ பார்க்கில் கூகுள் நிறுவனம் முறைப்படி நிறுவப்பட்டது.
பின்னர், செப்டம்பர் 27ஆம் தேதி கூகுளின் ஹோம் பேஜ் அறிமுகம் செய்துவைக்கப்பட்டு ஜி என்ற லோகோ எழுத்து உலகிற்கு முதன்முறையாக வெளிக்காட்டப்பட்டது. அப்போது, எரிக் ஷ்மித் என்ற வர்த்தக நண்பரும் இவர்களுடன் இணைந்துகொண்டார்.

இதனால் கூகுள் தூண்களின் எண்ணிக்கை 2லிருந்து 3ஆக உயர்ந்தது. கூகுள் தொடங்கப்பட்ட ஆறே ஆண்டுகளில் யாஹூ சர்ச் என்ஜின் தளத்தை வேறோடு சாய்த்து, புதிய ஜாம்பவானாக உருவெடுத்து நின்றது.
70லட்ச ரூபாய் என்ற முதலீட்டுடன் கூகுளின் தொடக்கம் அமைந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி அந்தளவிற்கு கூகுளின் வளர்ச்சி அமையவில்லை. இதனால் கூகுளை, எக்ஸைட் இணைய நிறுவனத்திற்கு விற்க முன்வந்தனர் மூவேந்தர்கள்.
ஆனால், கூகுளின் விலை மிகவும் அதிகம் என்று கூறிய எக்ஸைட் நிர்வாகம், அதனை வாங்குவதற்கு மறுத்து விட்டது. இந்த இடம் தான் எக்ஸைட் அதன் வாழ்நாளில் செய்த மிகப்பெரிய தவறாக இன்று வரை பார்க்கப்படுகிறது. கூகுளை மட்டும் எக்ஸைட் அப்போது வாங்கியிருந்தால், இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை நம்மால் இப்போது கண்டிருக்க முடியாது.

விடா முயற்சியில் சற்று தளராத மூவேந்தர்கள், குறுகிய காலத்திலேயே அதிக யூசர்களைப் பெற்று, கணிசமான அளவு விளம்பரங்களை குவித்தனர். கடந்த 2001ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்திற்கு விளம்பரங்கள் மூலம் கிடைத்த வருவாய் மட்டும் 500 கோடி ரூபாய். 2010ஆம் ஆண்டில் 2லட்சம் கோடி ரூபாயாகவும், கடந்த 2017ஆம் ஆண்டில் 7லட்சம் கோடி ரூபாயாகவும் அசுர வளர்ச்சி அடைந்தது. 70லட்ச ரூபாய் மூலதனத்துடன் தொடங்கிய கூகுளின் கஜானா நிரப்பும் பயணம், 7லட்சம் கோடி வரைக் கடந்தும் வருவாய் வேட்டை நடத்தி வருகிறது.
இது ஒருபுறமிருக்க, கூகுளின் மொத்த சந்தை மூலதன ஆக்கத்தின் மதிப்பு 40லட்சம் கோடி ரூபாய். மலைக்க வைக்கும் இந்தளவு சந்தை மூலதனத்தை திரட்ட கூகுளால் மட்டுமே முடியும் என்பது நிதர்சனம். இத்தனைக்கும் கூகுள் நிறுவனத்துக்கு நூற்றாண்டு கண்ட அனுபவமோ அல்லது தொழில் பாரம்பரியம்கொண்ட வரலாறோ கிடையாது.
நீங்கள் திறமையானவர், உங்கள் திறமைக்குப் போட்டி இருக்கிறது என்று தெரிந்தால், உடனடியாக உங்களுக்கு கூகுளிலிருந்து அழைப்பு வந்துவிடும். இந்தக் கனவுகளோடு புது புது அப்ளிகேஷன்களை உருவாக்கி கூகுள் நிறுவனத்துக்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள் உலகம் முழுவதிலும் உள்ள மென்பொருள் ஃபிரீக் இளைஞர்கள்.

கூகுளின் அசுர வளர்ச்சிக்கு அதிர்ஷ்டம் ஒரு காரணம் என்றாலும், அதன் ஈடு இணையற்ற படைப்புகள் மற்றொரு காரணம். Search tools, Advertising services, Communication and publishing tools, Development tools, Security tools, Map-related products, Statistical tools, Operating systems, Desktop applications, Mobile web applications, Mobile standalone applications, Hardware என கூகுள் கால் பதித்து சாதனை படைக்காத துறைகளே இல்லை எனலாம்.
எந்தெந்த துறைகளில் கூகுள் கால் பதிக்கின்றதோ அந்த துறைகளில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்கள் பலவீனமடைந்து தெறித்து ஓடும் என்பது தான் உண்மை.
நமக்கு தெரியாத தகவல்களை நமக்கு உடனடியாக தெரிவிப்பவரை ஆசான் என்றும், ஆண்டவன் என்றும் அழைக்கின்றோம். அப்படி பார்த்தால் கூகுளும் ஒரு இணையக்கடவுள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
உலக தேடுதல் நாயகனான கூகுளுக்கே கட்டளையிடும் அதிகாரம் ஒரு தமிழனுக்கு கிடைத்திருப்பது தமிழ் பேசும் ஒவ்வொருவருக்கும் கிடைத்துள்ள தனிப்பட்ட அடையாளம். அந்த தமிழன் வேறு யாருமல்ல, மதுரையை பூர்வீகமாகக் கொண்ட சுந்தர் பிச்சை....

1972ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதியன்று மதுரையில் பிறந்த சுந்தர் பிச்சை, சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிப்படிப்புகளை முடித்துக்கொண்டு அமெரிக்கா பறந்தார். அங்கு, வெகு விரைவிலேயே குடியுரிமைப் பெற்று வர்த்தக உலகத்திற்கான பயணத்தை துரிதப்படுத்தினார்.
பயணத்தின் முடிவில், கூகுள் என்ற மிகப்பெரிய சாம்ராஜ்யத்திற்கு தலைமை செயலதிகாரியாக பணியமர்த்தப்பட்டுள்ளார். இவரது சம்பளம் 1700 கோடியைக் கடந்து சென்றுகொண்டே இருக்கிறது.
17,000 ரூபாய் சம்பளம் வாங்குவதற்கே நம்மில் பலருக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் தேவைப்படும் நிலையில், 46-ஏ வயதில் சுந்த பிச்சை 1700 கோடியை வருடாந்திர சம்பளமாக பெறுகிறார்.
கூகுள் நிறுவப்பட்ட இந்த நாள், இணையத்தை பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் இனிய நாளாக அமையட்டும். தமிழனால் ஆளப்படும் கூகுளின் வளர்ச்சி, எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி தன்னலமின்றி தொடர வேண்டும் என்பதே உலக இணைய யூசர்களின் விருப்பமாக உள்ளது.
20வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள கூகுளின் படைப்புப் பாதம், தேடுதலை விரும்புவோர் வீடுகளிலும், அலுவலகங்களிலும் படும் என உறுதியாக நம்பலாம்
Classic Right sidebar Google, United States, அமெரிக்கா, லாரி பேஜ், சேர்ஜி ப்ரின், Larry Page, Sergey Brin, Search Engine தொழில்நுட்பம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xGCnEc
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment