Wednesday, October 10, 2018

நிலநடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பின் ருத்ரதாண்டவம் - கலக்கத்தில் இந்தோனேசிய அரசு

இந்தோனேசிய இயற்கை பேரிடர்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 2,000 ஐ நெருங்கியுள்ளது. மேலும், 5,000-கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பதால் அந்நாட்டில் அசாதாரண சூழல் நிலவுகிறது.

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில், கடந்த மாதம் 28-ந்தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைதொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. அங்கிருந்த பெரும்பாலான வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. கரை ஒதுங்கியுள்ள மற்றும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள சடலங்கள் கைப்பற்றப்பட்டு அவை ஒரே இடத்தில் வைத்து புதைக்கப்பட்டு வருகின்றன. 

இந்த இயற்கை பேரிடர் தாக்கத்திலிருந்து மக்கள் மீள்வதற்குள்,  சுலவேசி தீவில் உள்ள மவுண்ட் சோபூடன் எரிமலை, அண்மையில் வெடித்துத் சிதறி கடும் சீற்றத்துடன் சாம்பலைக் கக்கத் தொடங்கியது. எரிமலையில் இருந்து வெளிவரும் புகையானது வானில் 6,000 மீட்டர் உயரத்திற்கு பரவியதால் வான் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த சாம்பல் விமான என்ஜின்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்  அப்பகுதியில் விமானங்களை இயக்குவதை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். எரிமலை அருகில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும், சாம்பல் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முகமூடிகள் அணிந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஏற்கனவே சாலை போக்குவரத்தும், கடல் போக்குவரத்தும் முடங்கிய நிலையில் வான் போக்குவரத்தும் இயல்பை இழந்துள்ளதால் சுலவேசி மற்றும் பலு புறநகர் பகுதிவாசிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். 

இது ஒருபுறமிருக்க, கரை ஒதுங்கியுள்ள சடலங்கள் அழுகத்தொடங்கி இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகின்றது. சர்வதேச நாடுகளிடம் சுகாதார உதவிகளை எதிர்பார்ப்பதாக இந்தோனேசிய அரசு பகிரங்கமாக கேட்டுக்கொண்டுள்ளது. நிமிடத்திற்கு நிமிடம் சடலங்கள் மீட்கப்படுவதால் இந்தோனேசியாவில் அசாதாரண சூழல் நிலவுகிறது.  
தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது வரை 1,970 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் பலி எண்ணிக்கை 2,000ஐ எட்டும் என்று இந்தோனேசிய அரசு அச்சம் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்டுள்ள சடலங்களில் சிலவற்றை அடையாளம் காட்டும் பணிக்காக அவைகளை மருத்துவமனைக்கு கொண்டு செய்யும் பணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இது மட்டுமின்றி, 5,000-கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பதாகவும், ஒரு வாரம் கடந்தும் இவர்கள் குறித்து எவ்வித தகவலும் இதுவரை தெரியவராததால் பலி எண்ணிக்கை வரலாற்று உச்சத்தை தொடும் என்று பெரும் அச்சத்துடன் எதிர்பார்த்துள்ளது அரசு. வரும் 11-ம் தேதி வரை மீட்புப்பணிகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மாயமானவர்களின் உறவினர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். கடுமையாக உருக்குலைந்துள்ள பகுதிகளுக்கு சென்றுள்ள செஞ்சிலுவை சங்கத்தினர் காயமடைந்துள்ள 1,800-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றனர். 

முன்னதாக, கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி  500 பேர் வரை உயிரிழந்திருந்திருந்தனர். இவ்விரண்டு மாதங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட தற்போதைய உயிரிழப்புகள் 4 மடங்கு அதிகமாகும். நிலநடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு என இயற்கை பேரிடர்களின் அடுத்தடுத்த ருத்ரதாண்டவங்களால் நிலைகுலைந்துள்ள இந்தோனேசியாவிற்கு எந்தெந்த சர்வதேச நாடுகள் உதவி புரிய முன்வரும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
 

Classic Right sidebar இந்தோனேசிய இயற்கை பேரிடர், அசாதாரண சூழல், இந்தோனேசியா உலகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QIrr09
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment