Monday, October 1, 2018

இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91-வது பிறந்த நாள்..!

நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி, நடமாடும் நடிப்பு பல்கலைக்கழகம் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சிவாஜி கணேசனின் 91-வது பிறந்த நாள் இன்று. இதையொட்டி அவரைப் பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்...!

சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாள் தம்பதிக்கு மகனாக 1928 ஆம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி பிறந்தவர் சிவாஜி கணேசன். இவர், திரையுலகத்துக்கு வருவதற்கு  முன்பு மேடை நாடகங்களில் நடித்து வந்தார்.

வி.சி.கணேசன் என்கிற பெயரைக் கொண்ட அவர், ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் மாவீரன் சிவாஜியாக நடித்தபோது, அவரின் நடிப்புத்திறமையை மெச்சிய தந்தை பெரியார், 'சிவாஜி' என்கிற சிறப்பு பெயரை சூட்டினார். அப்போதிலிருந்து சிவாஜி கணேசன் என்கிற பெயரே நிலைத்தது. 

பின்னர், ‘பராசக்தி’ திரைப்படத்தின் மூலம் சினிமா உலகத்துக்கு அறிமுகமானார் சிவாஜி. பல்வேறு சோதனைகளையும், கடுமையான விமர்சனங்களையும் கடந்து வந்த இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் வரும் நீதி மன்ற காட்சியில், குமுறும் எரிமலையாய், கொந்தளிக்கும் கடலாய், உணர்ச்சிப் பிரவாகமாய் பொங்கி, சிம்மக் குரலெடுத்து சிவாஜி கணேசன் பேசிய வசனங்கள் வரவேற்பை பெற்றன.    

இவர் நடித்த ‘மனோகரா’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகவே ஓடின. சுதந்திரத்துக்குப் பிறகு சிவாஜிகணேசன் தனது திரைப்படங்கள் வழியாக தேச பக்தியை வளர்த்தார்! கப்பலோடிய தமிழானாக, வீரபாண்டிய கட்டபொம்மனாக, கொடிகாத்த குமரனாக, மகாகவி பாரதியாராக... வரலாற்று நாயகர்கள் அத்தனை பேரையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினார். பாசமலர், பாகப் பிரிவினை, பாலும் பழமும், நவராத்திரி, வசந்த மாளிகை, தங்கப் பதக்கம், திரிசூலம்   போன்ற படங்கள் இவரின் உணர்ச்சிகரமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.  

பாரதிராஜாவின் இயக்கத்தில் ‘முதல் மரியாதை’, கமல்ஹாசனுடன் ‘தேவர் மகன்’, விஜய்யுடன் ‘ஒன்ஸ் மோர்’ என அவர், தனது முதுமை வயதிலும் நடிப்பு முத்திரை யைப் பதித்தார். 

நல்ல குரல்வளம், தெளிவான வசன உச்சரிப்பு, உணர்ச்சிகரமான நடிப்பு என கிட்ட தட்ட 300 படங்களில் நடித்திருக்கும் சிவாஜி கணேசன், தெலுங்கில் 9 படங்களும், ஹிந்தியில் 2 படங்களும், மலையாளத்தில் ஒரு படமும் நடித்துள்ளார்.

நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி, நடமாடும் நடிப்பு பல்கலைக்கழகம் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட சிவாஜி கணேசன், கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், செவாலியர், தாதாசாகிப் பால்கே என பல விருதுகளைப் பெற்றுள்ளார். 1962 ஆம் ஆண்டு இந்திய கலாச்சார தூதராக அமெரிக்கா சென்ற சிவாஜி கணேசனை, அப்போதைய ஜான் கென்னடி, நயாகரா நகரத்தின் ஒரு நாள் மேயராக நியமித்து, அவரை கெளரவப் படுத்தினார்.   

சென்னை அடையாறில் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைத்திருக்கும் தமிழக அரசு, இந்த ஆண்டு முதல் சிவாஜியின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப் போவதாக அறிவித்தது. அதன்படி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், சிவாஜி கணேசனின் 91வது பிறந்த நாளான இன்று சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

Classic Right sidebar நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி, சிவாஜி கணேசன், Sivaji Ganesan, Nadigar Thilagam, Kollywood சினிமா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2RdGKPm
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment