நீதிமன்றத்தில் குற்றவாளியை சரணடைய வைத்த விவகாரத்தில் காவல்துறை உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) ஒருவர், வக்கீலிடம் துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து, அவதூறாகப் பேசியது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது பற்றி தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ள மாநில மனித உரிமை ஆணையம், நெல்லை எஸ்.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாளையங்கோட்டையில் குலவணிகர்புரத்தைச் சார்ந்தவர் இசக்கி பாண்டியன். இவர் நெல்லை நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வழக்குரைஞராக பணியாற்றி வருகிறார். தன் கட்சிக்காரரான குற்றவழக்கில் சிக்கிய பேச்சிமுத்து என்பவருக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் வாங்க வழக்கறிஞர் இசக்கி பாண்டியன் முயற்சி செய்துள்ளார்.
எனினும், நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. அதனால் நெல்லை நீதிமன்றத்தில் பேச்சிமுத்து சரண் அடைவதற்கு வழக்கறிஞர் இசக்கி பாண்டியன் ஏற்பாடு செய்துள்ளார். இதை அறிந்த தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜா, வழக்கறிஞர் இசக்கி பாண்டியனை செல்போனில் கூப்பிட்டு, சம்பந்தப்பட்ட குற்றவாளி மீது எங்கள் காவல் நிலையத்தில் வழக்குகள் இருக்கிறது. எனவே, என்னிடம் அவரை ஒப்படைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதற்கு வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று சம்பந்தப்பட்ட குற்றவாளியை நெல்லை நீதிமன்றத்தில் சரணடைய வைத்துள்ளார் வக்கில் இசக்கி பாண்டியன். இதில் குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் கோபமடைந்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்துகொண்டு சீருடை இல்லாமல் காரில் தூத்துக்குடியிலிருந்து கிளம்பி நெல்லை நீதிமன்றம் வந்துள்ளார்.
நீதிமன்றத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்த வழக்கறிஞர் இசக்கி பாண்டியன் மீது, உதவி ஆய்வாளர். இசக்கிராஜா தனது நண்பர்களுடன் வந்த காரை வைத்து மோத முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் துப்பாக்கியைக் காட்டி வக்கீல் இசக்கி பாண்டியனைச் சுட்டு விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும், அவதூறான வார்த்தைகளால் பேசி பேசி எஸ். ஐ இசக்கிராஜா மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
தன் மீது காரை மோத முயற்சி செய்து, துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து, அவதூறாகப் பேசியதாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வக்கீல் இசக்கி பாண்டியன், எஸ்.ஐ. இசக்கிராஜா மீது புகார் செய்தார். வழக்கறிஞர்களும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன்பேரில் அவதூறாகப் பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் எஸ்.ஐ. இசக்கிராஜா மீது பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது பற்றிய வெளியான பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து (SUO-MOTU) எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி விரிவான அறிக்கையை இரண்டு வார காலத்திற்குள் அளிக்கும்படி சம்பவம் நடந்த நெல்லை மாவட்ட எஸ்.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
The post வக்கீலை துப்பாக்கி முனையில் மிரட்டல் விடுத்த எஸ்.ஐ.: மாநில மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் appeared first on Tamil Siragugal: Tamil News blog .
from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/3hju0Cw
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment