Tuesday, October 9, 2018

வடிவேலு பற்றிய சுவாரசிய தகவல்கள் !

பார்த்ததுமே ‘குபீர்’ சிரிப்பைக் கொண்டு வரும் கேலிச்சித்திரம் போல இருக்கும் ‘கார்ட்டூன் மனிதன்...! முகத்தை அஷ்டகோணலாக்கி, உடலை வளைத்து நெளித்து ரசிகர்களை விலா நோக சிரிக்க வைக்கும் வித்தை தெரிந்தவர்...! கோலிவுட்டில் காமெடி அரசனாக வெற்றிக்கொடி கட்டியிருக்கும் வடிவேலு, குணச்சித்திர நடிப்பிலும் முத்திரை பதித்தவர்! நல்ல குரல் வளமும் கொண்ட பன்முகத் திறமை கொண்டவர்..!       

மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்து வயிற்றோடும், வறுமையோடும் போராடிக் கொண்டிருந்த வடிவேலு, ஒரு கண்ணாடிப் பட்டறையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்தவர்! ‘ரசம் போன கண்ணாடி’ போல இருந்த அவரின் வாழ்க்கை; திடீரென ‘பளபளப்பு’ காட்டியது எப்படி...? 

மதுரை முனிச்சாலையில் ஒரு இடுக்கான குறுக்குத் தெருவில் வீடு...! அப்பா நடராஜன்; அம்மா சரோஜினி; மனைவி விசாலாட்சி, தங்கைகள் ஜெயந்தி - லதா; இவர்களோடு வடிவேலு...என குடும்பமே ஒரு கண்ணாடிப் பட்டறையில் கூலி வேலை பார்த்தனர். ஆனாலும்; வாய்க்கும் - வயித்துக்கும் போராட்டமாகவே இருந்தது! பெரிய குடும்பம் என்பதால் வாங்கும் கூலி போதவில்லை! வேலைக்குப் போனால் தான் அன்று அடுப்பு எரியும்!

இப்படி வறுமையோடு மல்லுக்கட்டிக்கட்டிக் கொண்டிருந்த வடிவேலுவுக்கு கொஞ்சம் பாடவும் வரும்! சாப்பாட்டுக்கே வழியில்லாதபோது எங்கிருந்து சங்கீதம் கற்றுக்கொள்வது! எல்லாம் கேள்வி ஞானம் தான்! அலுப்புத் தெரியாமல் இருப்பதற்காக அவ்வப்போது சினிமாப் பாட்டுக்களை எடுத்து விடுவாராம்! அதிலும் எம்.ஜி.ஆரின் கொள்கைப் பாடலென்றால் கொள்ளைப் பிரியமாம்! வடிவேலு பாட, அதை குடும்பம் மொத்தமும் மெய்மறந்து ரசிப்பார்களாம்!  அத்துடன், ‘நீ மட்டும் சினிமாவுக்குப் போனா எலாரையும் ஓரம் கட்டிருவ..!’ என உசுப்பேத்தியும் விடுவார்களாம்! இதனால், வேலையில் நாட்டம் கொள்ளாமல் புத்தி,    சினிமா கிறுக்குப் பிடித்து திரியுமாம்(AD NEW VO) (கண்ணாடிப் பட்டறையில் ஒவ்வொரு தடவையும் கண்ணாடியை எடுக்கும் போது அவரின் கருத்த முகம் பிரகாசமாகத் தெரிய, உடனே சினிமாக் கனவில் மிதப்பாராம்!) குடும்பத்தில் உள்ளவர்களோ; அவரை, ‘சின்ன ரஜினி, கருத்த கமல்ஹாசன்’ எனக் கருதி ‘எப்படியாச்சும் முன்னுக்கு வந்துருவான்’என நம்பினார்களாம்!

இந்தக் கர்வத்தோடு; மஞ்சப் பையில் வேட்டி சட்டையை எடுத்துப்போட்டு கொண்டு ‘மெட்ராஸ் போறேன்’ என கிளம்ப, அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி தருவார்களாம் குடும்பத்தினர்! பாட்டி, அப்பா - அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி விட்டு; சென்னைக்கு லாரி ஏறிடுவாராம் வடிவேலு. லாரி மீது போர்த்தப் பட்டிருக்கும் தார்ப்பாயில் படுத்தபடி; அதில் கட்டியிருக்கும் கயிற்றைக் கையில் கோர்த்தபடி கனவுகளோடு தூங்கிப் போவாராம். சினிமாக் கனவோடு கிளம்பியவருக்கு கனவில் என்ன வரும்? எல்லாம் நடிக்கிற மாதிரி கனவு தான்! 

சென்னைக்கு வந்து இறங்கியதும் என்ன செய்வது? எங்கே போவது? யாரைப் பார்ப்பது? என தெரியாமல், சுவர்களில் ஒட்டப் பட்டிருக்கும் சினிமா போஸ்டரை வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்த்தபடியே ஊரை சுத்தி வருவாராம்! மாசத்துக்கொரு முறை இந்த அமர்க்களம் நடக்குமாம்! சென்னைக்கு வரும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஏரியாவில் ஏதாவது வீட்டு வாசலில் படுத்துத் தூங்கிவுடுவாராம். 

பிறகு ஒருவழியாய் சினிமா கம்பெனியை தேடிப் பிடித்து சான்ஸ் கேட்டால், ஒடிசலாய், காக்காய் நிறத்தில், பரட்டை தலையுடன் இருக்கும் கோலத்தைப் பார்த்து; திட்டி தீர்த்து வெளியே விரட்டியடிப்பார்களாம்! ஒருமுறை ஏ.வி.எம்.ஸ்டூடியோ வாட்சுமேனிடம் நடித்துக் காட்டி சான்ஸ் கேட்ட சம்பவமும் இருக்கிறது.

இந்த கூத்தெல்லாம் ரெண்டே நாள்தான்! கை இருப்பு கரைந்ததும் மறுபடியும் மதுரைக்கு லாரி ஏறிவிடுவாராம்! ‘பொழைக்கற வழியப் பார்க்காம சினிமால நடிக்கப் போறானாம், புத்திகெட்ட பய..’ என ஊரில் ஏச்சும் பேச்சும் தாங்க முடியாமல்; ஒரு வாரம் வெளியே தலைகாட்ட மாட்டாராம். பிறகு திரும்பவும் கண்ணாடி அறுக்கப் போய்விடுவாராம்.

கொஞ்ச நாள் போனதும் மறுபடியும் வேதாளம் முறுங்கை மரம் ஏறும்! மெதுவாக, ‘மெட்ராஸ் கெளம்பறேன்’ என்று பேச்செடுப்பாராம்! இப்படி.. மதுரைக்கும், சென்னைக்கும் ஐந்து வருடம் அலைந்ததில் அந்த வழியில் வந்து போகும் அத்தனை லாரி டிரைவர்களும் பழக்கம் ஆனது தான் மிச்சம்! 

அந்த நேரம் பார்த்து, அவரின் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போய் படுக்கையில் விழுந்தார். அதனால் வடிவேலுவின் சினிமாக் கனவும் படுத்துப்போனது! ‘சினிமா நமக்கு சரிப்படாது’ என முடிவு செய்து கண்ணாடிப் பட்டறையே கதியாய் கிடந்தார்! 

வடிவேலு, சினிமாவை விட்டாலும்; சினிமா அவரை விடுவதாக இல்லை! ராஜ்கிரண், ஒரு கல்யாணத்துக்காக  மதுரை வந்திருப்பதை கேள்விப்பட்டு; கண்ணாடிப் பட்டறைக்கு லீவு போட்டு விட்டு; ராஜ்கிரணை சந்தித்து, ‘சார்... நான் நல்லா காமெடி பண்ணுவேன்’என சொல்லி யிருக்கிறார் வடிவேலு. அதுக்கு ராஜ்கிரண், ‘காமெடியா? அப்படின்னா என்ன?’ என கேட்க, ‘நாலு பேரை சிரிக்க வைக்கறது’ என அப்பாவியாய் சொல்லியிருக்கிறார் வடிவேலு. ‘அப்படியா.., எங்கள இப்போ சிரிக்க வை பாப்போம்’ என ராஜ்கிரண் சீரியசாக கேட்க, வேர்க்க விறுவிறுக்க அரை மணி நேரம் தனக்கு தெரிந்த அத்தனை வித்தையும் செய்து காட்டி அசத்தியிருக்கிறார் வடிவேலு. அதைப் பார்த்து ராஜ்கிரணும், அவருடன் இருந்தவர்களும் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.
அந்த சிரிப்பு தான்; அவரின் சினிமாவுக்கான என்ட்ரி பாஸாக இருந்தது!      

அடுத்த சில நாட்களில், திண்டுக்கல்லில் நடக்கும் ‘என் ராசாவின் மனசில’ படத்தின் ஷீட்டிங்கிற்கு வரும்படி கடிதம் வந்தது! அதுதான் வடிவேலு பார்த்த முதல் சினிமா ஷீட்டிங்! “ரெடி.. டேக்.. ஆக்‌ஷன்... கட்..’ போன்ற சினிமா வடார வார்தைகள் அவருக்கு அங்கு தான் அறிமுகமானது! ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் சின்ன ரோல் கொடுத்ததோடு;‘போடா போடா புண்ணாக்கு போடாத தப்புக்கணக்கு..’ என்கிற பாடலையும் கொடுத்து; வடிவேலுவின் சினிமா வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டார் ராஜ்கிரண். தனது முதல் படத்திலேயே ஒரு நடிகனாகவும், பாடகனாகவும் தன்னை தமிழ் சினிமாவில் பதிவு செய்தார் வடிவேலு. 

‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் நடித்து முடித்த கையோடு மூடை முடிச்சுகளோடு சென்னைக்கு கிளம்பி வந்தார் வடிவேலு! கையில் காசு இல்லை; தங்கவதற்கு இடம் இல்லை! ஆபீசிலேயே தங்கிக் கொள்ளும்படி சொன்னார் ராஜ்கிரண்! வாழ்க்கையில் ஒளிவிளக்கு ஏற்றி வைத்த ராஜ்கிரண் தான் கண்கண்ட தெய்வமாக தெரிந்தார்! 

‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் வரும் ‘போடா போடா புண்ணாக்கு’ பாட்டு சீனில் வேறொரு நடிகர்தான் நடிப்பதாக இருந்ததாம்; ஷீட்டிங்கின் போது அந்த நடிகருக்கு கால் ஒடிந்ததால் அவரால் வரமுடியாமல் போகவே; அதில் வடிவேலுவை நடிக்க வைத்து விட்டாராம் ராஜ்கிரண். படம் முடிந்து பின்னணி இசை சேர்ப்புவேலையின் போது வடிவேலு நடித்த காட்சிகளைப் பார்த்து, “யாரு அந்தப் பையன், காக்கா மாதிரி கழுத்த சாய்ச்சு சாய்ச்சு பாக்குறான், ரொம்ப நல்லா நடிக்கிறானே! என பாராட்டினாராம் இளையராஜா. ஆகவே தான்,   ‘அரண்மனை கிளி’யில் வடிவேலு கேரக்டருக்கு காக்காயன் என்றே பெயர் வைத்தராம் ராஜ்கிரண்.

அதற்குப் பிறகு வடிவேலு காட்டில் வாய்ப்பு மழை...! ரஜினிகாந்த் சொந்தமாக தயாரித்த ‘வள்ளி’ படத்தில் வடிவேலுக்கு வெயிட்டான ரோல்! ‘வள்ளி வரப்போறா...’ என டைட்டில் சாங் பாட வைத்தும் அழகுப் பார்த்தார் ரஜினி. “மதுரைக்காரனுங்களுக்கே தனிக்குசும்பு இருக்கும்! இவன்,அதை அப்படியே ஸ்கிரீன்ல கொண்டு வர்றான்பா!” என ‘வள்ளி’ படத்தில் வடிவேலுவின் நடிப்பை பார்த்து விட்டு ரஜினிகாந்த்திடம் சொன்னாராம் இளையராஜா. 
தனது எதார்த்தமான நடிப்பால் இளையராஜாவை இம்ப்ரெஸ் செய்த வடிவேலுக்கு சினிமாவில் வசந்த காலம் தொடங்கியது.

தமிழ் சினிமாவைக் கலக்கிக் கொண்டிருந்த காமெடி இரட்டையர்களான கவுண்டமணி - செந்தில் காம்பினே ஷனில் நடிக்குமளவுக்கு வளர்ந்தார் வடிவேலு. ஆர்.வி.உதயகுமார் இயக்கிய ‘சின்னக் கவுண்டர்’ படத்தில் விஜயகாந்த்துக்கு குடை பிடிக்கும் பண்ணையாளாக நடித்தார். 

பின்னர், ஆர்.வி.உதயகுமார், பிரபுவை வைத்து இயக்கிய  ‘ராஜகுமாரன்’ படத்தில் தங்கை மீது அன்பு காட்டும் பாசக்கார அண்ணனாக வந்து கவுண்டமணி, செந்திலை ஓவர்டேக்  செய்யுமளவுக்கு காமெடியில் அதகளம் செய்தார் வடிவேலு. 

கவுண்டமணி, செந்தில் காம்பினேஷனில் சின்ன கதாப்பாத்திரத்தில் வந்துபோன வடிவேலுவை, ‘காதலன்’ படத்தில் ஹீரோ பிரபுதேவாவின் நண்பனாக படம் முழுவதும் வரும்படியான கதாப்பாத்திரத்தைக் கொடுத்தார் இயக்குநர் ஷங்கர். அதில் தனக்கே உரிய பாணியில் காமெடியில் கலக்கினார் வடிவேலு. அதேபோல, ‘முதல்வன்’ படத்திலும் வடிவேலுவுக்கு சிறந்த கதாப்பாத்திரத்தை கொடுத்து வடிவேலுவை வளர்த்து விட்டார்.   

‘காதலன்’ படத்துக்குப் பிறகு, ஷோலோ காமெடியனாக களம் இறங்கிய “வடிவேலுவக் காமெடியனா போட்டா படத்தை சொன்னா விலைக்கு வாங்கிக்கறோம்” என வினியோகஸ்தர்கள் டிமாண்ட் செய்யுமளவுக்கு வளர்ந்தார் வடிவேலு.

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத மிக முக்கியமான காமெடி காம்போ என்றால் அது, பார்த்திபன் - வடிவேலு காம்போ தான். சேரன் இயக்கிய ‘பாரதி கண்ணம்மா’வில் 
ஆரம்பித்த இந்தக் கூட்டணி, தொடர்ந்து ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘காதல் கிறுக்கன்’,‘காக்கைச் சிறகினிலே’, ‘ஹவுஸ் ஃபுல்’, ‘குண்டக்க மண்டக்க’ என பல படங்களில் வடிவேலு - பார்த்திபன் காமெடி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.  

குறிப்பாக, ‘வெற்றிக்கொடி கட்டு’ படத்தில் சில்க் சிப்பா - வேட்டி சகிதமாக, குடை பிடிக்கவும், செண்ட் அடிக்கவும் வேலையாள் வைத்துக்கொண்டு; துபாய் பெருமை பேசித்திரியும் மைனராக வரும் வடிவேலு, பார்த்திபனை எகுறுவதும், பிறகு குட்டு அம்பலமானதும் அவரைப் பார்த்ததும் பம்முவதும், பதுங்குவதுமாய் செய்யும் அலப்பறைகள் வயிற்றை பஞ்சர் பண்ணும்!   

அதேபோல, பார்த்திபன் - வடிவேலு காம்போவில்  ‘குண்டக்க மண்டக்க’ படத்தில் வரும் மீன் விற்கும் காமெடியும் பயங்கரப் பாப்புலரானது!

தன் வளர்ச்சிக்காக வடிவேலு, இயக்குநர்களை நம்பி யிருந்த காலம் மாறி, இயக்குநர்கள் பலர், வடிவேலுவை நம்பவேண்டிய காலம் வந்தது! 

குடும்பக் கதைகளை எடுக்கும் இயக்குநர் வி.சேகரின் படங்களில், காமெடியை கலந்து அந்தப் படங்களின் வெற்றிக்கு உதவினார் வடிவேலு. வி.சேகர் இயக்கிய ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘பொங்கலோ பொங்கல்’ போன்ற படங்களில் ஹீரோவுக்கு இணையான வேடங்களில் வந்து அதில் தனது காமெடி முத்திரையைப் பதித்தார் வடிவேலு. இந்தப் படங்களில் வடிவேலு, கோவை சரளா காமெடிக் காம்பினேஷன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.    

அதேபோல, அறிமுக இயக்குநர் சூர்ய பிரகாஷ் இயக்கத்தில், சரத்குமார் நடிப்பில் வந்த ‘மாயி’ படத்தில் ‘வாம்மா மின்னல்..’ காமெடியும், கோவை சரளாவுடனான காம்பினேஷனும் கலக்கல் காமெடியாக அமைந்தது. 

நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர் இயக்குநர் சுந்தர்.சி, அவரின் படங்களில் காமெடிக்கு அதிக முக்கியத் துவம் இருக்கும். ஆரம்பத்தில் கவுண்டமணியோடு கை கோர்த்துக் கொண்ட சுந்தர்.சி, பிறகு வடிவேலுவுக்கு மாறினார். ‘வின்னர்’ படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் வடிவேலுவை மனதில் வைத்தே எழுதினாராம்!  

'ஒரு காதல் கதை பண்ணலாம்' என்று ஆரம்பித்து, பிறகு ‘படம் முழுக்க ஒரு ‘ஹியூமர் கேரக்டர் இருந்தால் சிறப்பாக இருக்குமே’ என டெவலப் செய்ய, அப்படி உருவானது தான் ‘கைப்புள்ள’ கேரக்டராம்! வடிவேலுவை ‘புக்’ பண்ண போனபோது, அந்த சமயத்தில் காலில் அடிபட்டு ஓய்விலிருந்தார் வடிவேலு. ‘கால் சரியானதும் ஷூட்டிங் வச்சுக்கலாம்ணே..’ என சுந்தர்.சி சொல்ல, ‘எனக்காக தள்ளிப்போட வேணாம், சமாளிச்சுக்கறேன், பிளான் பண்ணபடி ஷூட்டிங்கை வச்சிருங்க..! என்றாராம் வடிவேலு. குழப்பமாகவே இருந்தது இயக்குநர் சுந்தர்.சிக்கு. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போனதும், ‘கைப்புள்ள, கால் தாங்கி தாங்கி நடப்பவன்’னு மாத்திக்கலாம்?’ என ஆலோசனை சொன்னதோடு, அதை செய்து காட்டியபோது, யூனிட்டில் உள்ளவர்கள் விழுந்து சிரித்தார்களாம்! அவருக்கு அடிப்பட்ட விவரம் அறியாத படக்குழுவினர்,  ‘நடிப்புக்காக தான் அப்படி செய்கிறார்’ என நினைத்தார் களாம்! ஆனால், காலில் அடிபட்ட வலியையும், வேதனை யையும் தாங்கிக் கொண்ட வடிவேலு, ‘இதே சிரிப்பு, தியேட்டர்லயும் இருக்கும்..!’ என்றாராம். 

அதேபோல, சுந்தர்.சி இயக்கிய ‘தலைநகரம்’ படத்தில் டம்மி தாதாவாக வந்த வடிவேலு, ‘நான் ஜெயிலுக்குப் போறேன்.. ஜெயிலுக்குப் போறேன்..’ என காமெடியில் கலக்கினார். 

சுந்தர்.சி இயக்கத்தில் அர்ஜூன் நடித்திருந்த ‘கிரி’ படத்தில் பேக்கரி ஓனராக வரும் வடிவேலுவின் காமெடியை அடிச்சுக்க முடியாது...! 

சுந்தர்.சியின் சிஷ்யர் சுராஜ் இயக்கிய ‘மருதமலை’யில் காமெடிப் போலீஸாக வந்து, அந்தப் படத்தை தனது காமெடியால் தூக்கி நிறுத்தினார் வடிவேலு.

‘ஃப்ரெண்ட்ஸ்’ படத்தில் பெயிண்டிங் காண்ட்ராக்டரான வடிவேலு, சம்பளத்தை மிச்சப்படுத்துவதற்காக விஜய், சூர்யாவை அப்ரண்டீஸாக வைத்துக் கொண்டு, அவர்களை சமாளிக்க முடியாமல் படும் அவஸ்தைகள் காமெடியின் உச்சம்!

அதேபோல,‘சந்திரமுகி’யில் பேய் பங்களாவுக்குள் வரும் வடிவேலு, ரஜினியிடம் பேய் இருக்கா.. இல்லையா? நம்பலாமா..? நம்ப கூடாதா?’ என திகிலோடு கேட்கும் காமெடிக் காட்சி வடிவேலுவின் மாஸ்டர் பீஸ்!       

ரசிகர்களை சிரிக்க வைப்பதற்காக தன்னை வறுத்திக் கொள்ள தயங்காத வடிவேலு, சில படங்களில் உருக்கமான நடிப்பைக் காட்டி ரசிகர்களை அழவும் வைத்திருக்கிறார். 

காமெடியில் கபடியாடிக் கொண்டிருந்த வடிவேலுவை ‘தேவர் மகன்’ படத்தில் குணச்சித்திர நடிகராக அடையாளம் காட்டினார் கமல்ஹாசன். ஊரில் பெரிய தலக்கட்டாக இருக்கும் சிவாஜி வீட்டில் விசுவாசமான வேலையாளாக இருக்கும் வடிவேலு, கமல்ஹாசனுக்காக பூட்டிக்கிடக்கும் பிரச்னைக்குரிய கோவிலை திறந்து, அதனால் ஒரு கையை இழக்கும் இசக்கியாக வந்து இம்ப்ரெஸ் செய்தார்!

அதேபோல, ராம.நாராயணன் இயக்கத்தில் வந்த ‘ராஜ காளியம்மன்’ படத்தில் தாயாகவும், தந்தையாகவும் இருந்து தங்கையை தாங்கும் அண்ணாக, குணச்சித்திர நடிப்பைக் காட்டி கண்கலங்க வைத்தார். 

ஆனால், ரசிகர்கள் தன்னைடம் காமெடியைத் தான் எதிர்பார்க்கிறார்கள் என்பதால், குணச்சித்திர நடிப்பில் அவ்வளவாக ஆரவம் காட்டாமல், தொடர்ந்து காமெடியை மட்டுமே கையில் எடுத்தார் வடிவேலு!     

கோலிவுட்டில் காமெடி அரசனாக கொடி கட்டிப் பறந்த வடிவேலுவை ஹீரோவாக்கும் திட்டத்தோடு ‘இளைய ராஜாவின் மோதிரம்” என்கிற படம் தொடங்கப்பட்டது. இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனின் மகன் இயக்குவதாக இருந்த அந்த திட்டம் பாதியிலேயே ‘பணால்’ ஆனது! 

பிறகு தான், வடிவேலுவின் பாணியிலேயே ஒரு சரித்திரக் கதையை உருவாக்கினார் சிம்புதேவன். சேரன் படங்களில் உதவி இயக்குனராக இருந்த சிம்புதேவன், இயக்குனர் அவதாரம் எடுக்க முடிவு செய்த போது, ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’ கதையை தயார் செய்து; அதில் கோமாளித்தனமான மன்னன் தோற்றத்துடன் இருக்கும் வடிவேலுவின் கேலிச் சித்திரத்தை தீட்டித் திரைக்கதை புத்தகத்தை இயக்குனர் ஷங்கரிடம் கொடுத்தார். கோமாளித்தனமான மன்னன் கெட்அப்பில் இருந்த வடிவேலுவை பார்த்ததும் வாய்விட்டு குலுங்கி குலுங்கி சிரித்தாராம் ஷங்கர். மேலும் பழைய சரித்திர காலப் பின்னணியில் திரைக்கதை அமைத்திருந்த புதுமையும் பிடித்துப் போகவே அதை வடிவேலுவிடம் சொல்லி, அவரின் கால்ஷீட்டையும் வாங்கியதால், பட வேலைகள் விறுவிறுப்பாக தொடங்கியது.

பிரமாண்டமான அரண்மனை! கோட்டை கொத்தளங்கள்; யானைப்படை - குதிரைப்படை; போர் தந்திர முறை; செங்கோல் தாங்கிய மன்னன்; சேவகர்கள்; அந்தப்புர அழகிகள், ராஜ்யத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க ராஜகுரு செய்யும் சூழ்ச்சி; சொல்புத்திக்கார மன்னனின் கோமாளித்தனமான ஆட்சி; அலங்கோல ஆட்சியால் மக்கள் படும் அவதி... என இந்தக் காலத்து முகங்களை வைத்துக் கொண்டு, ரசிகர்களை அந்த காலத்துக்கே அழைத்துச் சென்று ஆச்சர்யப்படுத்திய அந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனது! 

சொல்புத்திக்கார புலிகேசி, சுயபுத்திக்கார உக்கிரபுத்திரன் என இருமாறுபட்ட வேடத்தில் அசத்தினார் வடிவேலு. அதிலும் அந்த புலிகேசி கதாபாத்திரம் வடிவேலுக்காகவே வடிவமைக்கப்பட்டிருந்தது. குழந்தைகளுக்குப் பிடித்த ‘பீஸ்’ஆக இருக்கும் வடிவேலு இதில் மெல்லிய கம்பியை வளைத்து விட்டதைப் போல மீசை வைத்துக் கொண்டு வலம் வந்து குழந்தைகளை குதூகலப்படுத்தினார். 
அரண்மனையில் நின்றபடி குறட்டை விட்டுத் தூங்கும் சேவகனின் மூக்கு வழியாக தனது கம்பி மீசையை விட்டு குத்திய போது ‘குபீர்’ சிரிப்பை கொண்டு வந்தது. இதுமாதிரியான காட்சிகள் பல இருந்ததால் ரசிகர்களுக்கு நல்ல நகைச்சுவை விருந்தாக இருந்தது.

‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’யின் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து ஹீரோ ரூட்டிலேயே பயணமாக நினைத்த வடிவேலு, தம்பி ராமையா இயக்கத்தில் ‘இந்திர லோகத்தில் நா.அழகப்பன்’ படத்தில் நடித்தார். ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஸ்ரேயாவை அதிக சம்பளம் கொடுத்து ஒரு பாடலுக்கு ஆட வைத்தும் கூட, அந்தப் படம் பப்படமானது..! வடிவேலுவை ஹீரோவாக போட்டு எடுக்கத் தயங்கினர்! 

இந்த சமயம் பார்த்து, 2011ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலின் போது, திமுகவின் பிரச்சாரப் பீரங்கியாக களத்தில் இறக்கப்பட்டார் வடிவேலு!தேர்தல் பிரச்சாரத்தில், தனது சினிமா பாணியில் ஜெயலலிதா, விஜயகாந்த் இருவரையும் ’டார்கெட்’ செய்து போட்டுத் தாக்கினார் வடிவேலு! 'இதென்ன ஏகத்துக்கும் போட்டுத் தாக்குறாரே..!’ என பொதுமக்கள் சற்று முகம் சுளிக்கத்தான் செய்தார்கள். 

ஆனால், தேர்தல் முடிவு வேறுமாதிரியாக அமைந்து, அவரின் சினிமா வாழ்க்கைக்கு எதிராக திரும்பியது! தேர்தல் சமயத்தில் ஆளும் கட்சியை வெளுத்து வாங்கிய வடிவேலுவை சினிமாவில் நடிக்க வைக்க யாரும் முன்வரவில்லை!     

மேலும், ஹீரோவான பிறகு காமெடி நடிப்புக்கு கொஞ்சம் இடைவெளி விட்டதால், அந்த ‘கேப்’பில் கோலிவுட் களத்தில் பல காமெடியன்கள் உள்ளே புகுந்தனர்! இதனால், வடிவேலுவுக்கு சுத்தமாக சினிமா சான்ஸ் வராமல் போனது! ‘உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளமாக்கிட்டாய்ங்களே!’ என அவர் பேசிய ’டயலாக்’கைப் போல, சிலர் உசுப்பேத்தியதை நம்பி, வாயால் கெட்டுப்போன வடிவேலு, அரசியல்வாதிகளை திட்டித் தீர்த்ததால் கிட்டதட்ட சினிமாவில் வன வாசத்தை அனுபவித்து விட்டார்.
    
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தெனாலிராமன்’, ‘எலி’ போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால், அதுவும் எடுபடவில்லை!   

காமெடியில் விட்ட இடத்தை பிடிப்பதற்காக இன்னமும் போராடி வரும் வடிவேலு 'கத்திச் சண்டை' படத்தில் காமெடியனாக நடித்தார். அதுவும் கைகொடுக்கவில்லை! பின்னர், விஜய்யுடன் ‘மெர்சல்’ படத்தில் தோன்றினார். அதில் அவர் ஏற்று நடித்தது காமெடியா? குணச்சித்திரமா? என்கிற குழப்பம் இன்னும் ரசிகர்களுக்கு இருக்கிறது!  

இந்த நிலையில், இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’யில் நடிக்க ஒப்புக்கொண்ட காமெடி அரசன் வடிவேலு நிஜமாகவே இம்சை அரசானாக மாறி, சம்பளப் பிரச்னை சர்ச்சையில் சிக்கி, பெயரைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்! 

என்.எஸ்.கிருஷ்ணன், தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், எம்.ஆர்.ராதா, பாலையா, சுருளிராஜன், கவுண்டமணி போன்ற காமெடி ஜாம்பவான்கள் கோலோச்சிய தமிழ் சினிமாவில், கிராமியமனம் மாறாத வெகுளித்தனமும், எதையுமே எளிமையாக சொல்லும் உடல்மொழியும், இரட்டை அர்த்தம் இல்லாத நகைச்சுவையும் வரமாக வாங்கி வந்தவர் வடிவேலு. திரைப்படங்களில், தான் அடி வாங்கி; திட்டு வாங்கி ரசிகர்களின் துயரங்களை மறக்க செய்து, மனம் விட்டு சிரிக்க வைத்து, ரசிகர்களால் ‘வைகைப்புயல்’ என கொண்டாடப்பட்டவர்.

வடிவேலு விட்டுக் கொடுத்த இடம் இப்போதும் காலியாகவே இருக்கிறது! இப்போது அவர், களமாட வில்லையென்றாலும்; இன்றைய இளம் தலைமுறை, வடிவேலுவின் காமெடியை வைத்தே’மீம்ஸ்’ செய்யும் அளவுக்கு அவரே காமெடி மாம்ஸாக இருக்கிறார்! இதன் வாயிலாக, இன்னும் காமெடி அரசனாகவே இருக்கிறார் வடிவேலு.   

 

Classic Right sidebar கேலிச்சித்திரம், கார்ட்டூன்மனிதன், ரசிகர், vadivelu சினிமா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2yo8QPk
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment